லிம் லியான் கியோக்கிற்கு நீதி வேண்டும்

லிம் லியான் கியோக் 1901-ல் சீனாவில் பிறந்து தன் முயற்சியால் கல்வி கற்று பிறகு 1930-களில் மலாயாவிற்கு ஆசிரியர் பணிப் புரிய வந்தவர். நாட்டின் விடுதலையொட்டி இயற்றப்பட்ட கல்வி சட்டங்கள் தாய் மொழி கல்விக்குப் பாதகமாக இருந்த போது கோலாலும்பூர் ஆசிரியர் சங்கம் கண்டு தாய்மொழிக் கல்விக்காக குரல் கொடுத்தார். பிறகு 1955-ல் சீன இனத்தின் உரிமைகளை குறித்து துங்குவோடு நடந்த ‘மலாக்கா பேச்சில்’ சீனர் அமைப்புகளுக்குத் தலைமை தாங்கியவர் அவர். பிற்கு 1956 ரசாக் திட்டத்தின் போதும், 1961 ரஹ்மான் திட்டத்தின் போதும் தாய் மொழி கல்விக்கு நேர்ந்த பின்னடைவுகளை சரி செய்யச் சொல்லி அரசைத் தொடர்ந்து வலியுறுத்தினார். இதன் காரணமாக அவரது குடியுரிமை அன்றைய அரசு தடை செய்தது.

இத்தனைக்கும் லிம் மலாயா நாட்டில் சீன இனம் மற்ற இனங்களோடு இணைந்து ஒற்றுமையாக வாழ் வேண்டுமென விரும்பியவர். அவரது எதிர்ப்புகளைக் கூட சாத்வீகமான முறையில் முன்வைத்தவர் அவர். 1961-ல் குடியுரிமையும் வேலை பெர்மிட்டும் பறிக்கப்பட்ட பிறகு பலர் உதவ முன்வந்தபோதும் சீனர் தனியார் பள்ளிகளின் ஆசிரியர் வேலை செய்துக் கொண்டே எளிமையாக வாழ்ந்தார். 1985-ல் அவர் இறக்கும் வரை நாடற்றவராகவே இறந்தார் லிம்.

இந்நிகழ்வின் நோக்கங்கள் பின்வறுமாறு :

1. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கவும் பறிக்கப்பட்ட குடியுரிமையை மீண்டும் மீட்பது.

2. தாய்மொழி சமத்துவச் சட்டத்தை இயற்றுவது.

கிட்டதட்ட 200 அரசு சாரா அமைப்புகளின் ஆதரவோடு இந்நிகழ்வு நடந்தது. முக்கியமாக இசா சட்டத்தை எதிர்க்கும் அமைப்பிலிருந்து ஹலிமா அவர்கள் கலந்து உரையாற்றினார். தாய்மொழி கல்வி என்பது அனைவரின் அடிப்படை உரிமை என்றும் அதற்காக குரல் கொடுத்தவரின் குடியுரிமையைப் பறிப்பது நியாயமற்றது என்றும் கூறினார்.
இன்னும் சிலர் சீனத்தில் பேசினர். எனக்கு சீனம் விளங்காததால் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் சுருக்கமாக அவர்கள் பேசியதை விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களில் பெரும்பாலோர் லிம் அவர்களோடு சேர்ந்து போராடியவர்கள். அவரின் குடியுரிமை பறிக்கப்பட்ட பின் அவரின் வாழ்வியல் தேவைகளுக்கு உதவியவர்கள். லிம் அவர்களின் குடியுரிமை வழக்கில் அவருக்கு அவருக்கு வழக்கறிஞராக இருந்தவர்கள் DR, சீனிவாசகம், ரமணி மற்றும் PG.Lim போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.

என்னையும் சுருக்கமாக உரையாற்றச் சொன்னார்கள். நான் லிம் லியான் கியோக் பற்றிய ஆங்கில நூலை தமிழுக்கு மொழிபெயர்ப்பை செய்தவன்(தற்போது வடிவமைப்பு வேலைகள் நடக்கிறது) என்பதால் பேச ஒப்புக் கொண்டேன். அந்நூலை வாசித்த வரை லிம் லியான் கியோக் வெறும் மொழி வெறியரோ அல்லது தீவிரவாதியோ இல்லை என்பதை முன்வைத்தேன். அவர் சீனர்கள் மற்ற இனத்தவர்களோடு சேர்ந்து வாழ்வே விரும்பியவர். மலாய் மொழியோடு ஆங்கிலம், சீனம், தமிழ் போன்ற மொழிகளும் அதிகாரபூர்வ மொழிகளாக இருக்க வேண்டும் என விரும்பியவர். மலாக்கா பேச்சின் போது, 1955 தேர்தலுக்கு பின் இதை நிறைவேற்றுவோம் என துங்கு வழங்கிய வாக்குறுதியை நம்பி ஏமாந்தவர். பழமையானதும் எதிர்கால சமூகத்திற்கு ஆன்ம பலம் தரக்கூடிய செழுமையான பண்பாட்டு கூறுகளும் அறியவே தாய் மொழி கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியவர் அவர். சாத்வீகமான போராட்டங்களுக்காக குடியுரிமை பறிக்கப்படுவதெல்லாம் மக்களாட்சியின் மேல் இந்நாட்டின் மக்களின் நம்பிக்கையைதான் குலைக்கும் என்பதை அரசு உணர வேண்டும். தாய்மொழி கல்வி போராட்டத்தில் அனைத்து இனமும் இணைந்து கொள்ளும் முதல் அடியாக இங்கு மலாய், இந்திய இனத்தைச் சார்ந்தவர்களையும் அழைத்திருப்பது முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். கிட்டதட்ட இப்படிதான் பேசினேன் என நினைக்கிறேன்.

நிகழ்வு முடிந்து மண்டபத்தில் உள்ள ஒரு உணவகத்திலேயே மதிய உணவு. முடிந்த வரை சாமிவேலுவை கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்கள். வாய்ப்பு கிடைத்த போது நானும் கொஞ்சம் மசீச-வின் காலை வாரிவிட்டேன். பெரும்பாலும் இந்தியர்கள் நிலையை அறிந்து கொள்ள விருப்பத்தோடு இருந்தனர். தமிழ்ப்பள்ளியில் சேரும் மாணவர்கள் சதவிதத்தை ஒருவர் கேட்டார். 50% சற்று அதிகம் என சொல்லி வைத்தேன். சீனர்கள் 90 சதவிதம் என்றார் கேட்டவர். தமிழ்ப்பள்ளியிலும் 90% வர உங்களின் ஆலோசனையும் உதவியும் தேவைப்படுவதாக தாழ்மையுடன் தெரிவித்தேன்.

ஆக்கம் : சு.யுவராஜன்
11/5/2011

 

原文出处:按我 

发表评论

您的电子邮箱地址不会被公开。 必填项已用*标注