தாய்மொழிக் கல்விக்கு எதிரான அனைத்து வேறுபாடுகளும் அகற்றப்பட வேண்டும்

Source : Semparuthi

எந்த நாட்டின் ஒற்றுமையின்மைக்கும் தாய்மொழிக் கல்வி காரணமாக இருந்ததே இல்லை. இது மலேசியாவுக்கும் பொருந்தும். அவ்வாறே, ஒரே மொழிக்கல்வி எந்த நாட்டிலும் ஒற்றுமையை உறுதிப்படுத்தி அதனை நிரந்தரமாக்கியதில்லை. நேற்று இரவு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்துலக தாய்மொழி தினம் 2012 நிகழ்வில் உரையாற்றியவர்கள் இக்கருத்தை வலியுறுத்தினர்.

ஒற்றுமையின்மைக்கு வித்திடும் என்ற கூற்றுக்கு மாறாக, தாய்மொழி கல்வி சிறார்களின் ஆற்றலை வளர்த்திடவும், பல்லின மக்களிடையே அவரவர்களின் பண்பாடுகளைப் புரிந்து கொள்ளவும், வேறுபாடுகளை உணர்ந்து போற்றவும், அவற்றினால் வளப்பமடையவும் உதவுகிறது. தாய்மொழியின் இச்சிறப்புகளை ஐநா மன்றம் ஏற்றுக்கொண்டு, அங்கீகாரம் அளித்துள்ளது. தாய்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளவும், அதன் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கவும், அதன் போதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அனைத்துலக தாய்மொழி தினம் ஐநாவால் பிரகடனம் செய்யப்பட்டது என்று அந்நிகழ்வில் உரையாற்றிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி கூறினார்.

நேற்றிரவு நடைபெற்ற அனைத்துலக தாய்மொழி தினம் நிகழ்வில் அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களுமாக 200 க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் நாட்டின் புகழ் பெற்ற கவிஞரான நாமக்கல் ராமலிங்கத்தின் புதல்வர் ராஜா ராமலிங்கம் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மாலை மணி 6.30 லிருந்து இரவு மணி 10.00 வரையில் நடைபெற்ற இந்நிகழ்வை தமிழ் அறவாரியத்துடன் இணைந்து லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையம், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபம், மலாயா பல்கலைக்கழக மொழி மற்றும் மொழியியல்துறை மற்றும் போஆம் அமைப்பு ஆகியவை நடத்தின.

மலேசியாவின் பொருளாதாரம் மற்றும் அதன் வளப்பத்திற்கு சீன, தமிழ் மற்றும் மொழிகளைக் கற்றவர்கள் தங்கள்டைய பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிய பசுபதி, தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளுக்கு மலேசிய அரசமைப்புச் சட்டம் அங்கீகாரம் அளித்துள்ளது. அதன் மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் தமிழ் அறவாரியம் கடப்பாடு கொண்டுள்ளது என்றாரவர்.

“மொழி ஆன்மாவாகும். பன்முக கலாச்சாரமும் பன்மொழி போதனையும் ஒற்றுமைக்கு மருட்டல் அல்ல என்பதை மலேசியா நிரூபித்துள்ளது. ஆகவே, இவை தொடர வேண்டும்”, என்றார் பசுபதி.

மன்னிக்க முடியாத குற்றம்

தாய்மொழிக் கல்வியின் சிறப்பை வலியுறுத்தி தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றிய நாமக்கல் கவிஞரின் புதல்வர் ராஜா ராமலிங்கம், “தங்கள்டைய இளமைக் காலத்தில் தாய்மொழியில் கல்வி கற்கும் குழந்தைகள் இதர மொழிகளையும், இதர பாடங்களையும் தாய்மொழியில் கல்வி கற்பதிலிருந்து தடைசெய்யப்பட்ட குழந்தைகளைவிட சிறப்பாக கற்றுத் தேருகின்றனர்”, என்று கூறினார்.

“தமிழ்மொழியை நம் குழந்தைகள் சிறப்பாகக் கற்று சான்றோர்களாக வாழ வழி அமைப்பது நமது முக்கிய கடமையகும்”, என்பதை வலியுறுத்திய ராஜா, “குழந்தைப் பருவத்திலே தமிழை வார்ப்பது, நம் குழந்தைகள் மற்ற பாடங்களையும், மொழிகளையும் கசட றக் கற்பதிலே வல்லவர்களாக வாழ வழிவகுக்கும் என்பதில் ஐயமே இல்லை”, என்று உறுதியாகக் கூறினார்.

“தமிழை மறந்தால் தமிழ் இலக்கியமும், வரலாறும் அதோடு போய்விடும். மன்னிக்க முடியாத குறை வந்து சேரும்”, என்று அவர் எச்சரித்தார். (அவரது முழு உரையும் பின்னர் வெளியிடப்படும்)

அனைத்து தாய்மொழிப்பள்ளிகளையும் அழிக்கும் கொள்கை

மலேசியாவின் சிறுபான்மை சமூகத்தினர் தங்கள்டைய மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றின் உரிமைக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர் என்று டாக்டர் தோ கின் வூன் அவரது உரையில் கூறினார்.

“சுதந்திரத்திற்கு முன்னதாக, நமது முன்னோர்கள் கடுமையாக உழைத்து சிரமப்பட்டு சம்பாதித்த பணத்தில் தங்களுடைய குழந்தைகளின் கல்விக்காக பள்ளிக்கூடங்களைக் கட்டினர். காலனித்துவ அரசாங்கதின் உதவி எதுவுமின்றி சீனர்களும் இந்தியர்களும் ஆயிரம் பள்ளிக்கூடங்களைக் கட்டினர். இது அவர்கள் தங்களுடைய மொழியின் மீது கொண்டுள்ள பாசத்தையும் தங்களுடைய பண்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்ற உறுதிப்பாட்டையும் காட்டுகிறது.

“மிக வருந்தும் வகையில், சுதந்திரத்திற்குப் பின்னர், அரசாங்கம் ஒரே மொழி கல்விக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றியது. அக்கொள்கை அனைத்து தாய்மொழிப்பள்ளிகளையும் அழிக்க வேண்டும் என்பதை இறுதிக் குறிக்கோளாக கொண்டிருக்கிறது. இது ஏன் அரசாங்கம் ஒரு புதிய தாய்மொழிப்பள்ளிக்குகூட அனுமதி அளிக்க விரும்பவில்லை என்பதை விளக்குகிறது”, என்று லிம் லியன் கியோக் கலாச்சார மேம்பாட்டு மையத்தின் தலைவரும், பினாங்கு மாநில முன்னாள் கெராக்கான் ஆட்சிக்குழு உறுப்பினருமான தோ கூறினார்.

சமூகத்தின் பண்பாட்டையும் மொழியையும் தக்கவைப்பதற்கு மிகச் சிறந்த வழி தாய்மொழிக் கல்விதான் என்று எல்எல்ஜி மையத்தினர் கருதுவதாக அவர் கூறினார்.

“இக்கொள்கைக்கு ஏற்ப ஒரு சமநிலை கல்விச் சட்டம் இயற்றி அதன் வழி தாய்மொழிக் கல்விக்கு எதிரான அனைத்து வேறுபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு நாங்கள் மலேசிய அரசாங்கத்தை கடுமையாக வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம். அம்மாதிரியான சட்டத்தின் மூலமாக மட்டுமே சீன, தமிழ்ப்பள்ளிகளின் சுயேட்சையான மேம்பாடும் பாரபட்சமற்ற வகையில் வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுதலும் உறுதி செய்யப்பட இயலும்”, என்று அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் ஒரே மொழிக் கொள்கையை மாற்றி பன்மொழிக் கொள்கையாக்க நமது சமுதாய சக்தியை ஒன்றுபடுத்துவது எப்படி என்பதுதான் தற்போதைய சவால் என்றாரவர்.

உரைகளுக்கிடையில், சீன, இந்திய, மலாய் மற்றும் பூர்வீக குடிமக்கள் ஆகியோரின் பாரம்பரிய நடனங்களும், பாடல்களும் இடம் பெற்றன.

இந்நிகழ்வை இணைந்து நடத்திய இதர அமைப்புகளின் பிரதிநிதிகளும் தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

இறுதியில், சுவாராம் என்ற மனித உரிமைகள் கழகத்தின் தலைவரான கா.ஆறுமுகம் அனைத்துலக தாய்மொழி தினம் 2012 நிகழ்வை நடத்திய அமைப்புகளின் சார்பில் அரசாங்கத்திடம் தாக்கல் செய்வதற்காக எட்டு கூறுகளைக் கொண்ட தீர்மானம் ஒன்றை நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் ஒப்புதலுக்காக முன்மொழிந்தார்.

கீழ்க்கண்ட அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது:

அரச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *