பல்லின நாடான மலேசியாவில் தாய்மொழிக் கல்வி நிலைத்திருப்பதையும் மேம்பாடு காணுவதையும் உறுதி செய்வதற்கு மலேசிய தமிழ் அறவாரியமும் லிம் லியன் கியோக் கலாசார மேம்பாட்டு மையமும் ( எல்எல்ஜி ) கூட்டாகச் செயல்பட இணக்கம் தெரிவித்தன.
அவ்விரு அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று இரவு கோலாலம்பூரில் தமிழ் அறவாரியத்தின் அலுவலகத்தில் சந்தித்து நடத்திய ஒரு கலந்துரையாடலில் இவ்விணக்கம் காணப்பட்டது.
எல்எல்ஜி மையத்தின் தலைவர் டாக்டர் தோ கின் வூனையும் அவரது குழுவினரயும் வரவேற்று பேசிய தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம் தாய்மொழிக் கல்வி மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு ஆகியவை தமிழ் அறவாரியத்தின் இரு முக்கிய இலட்சியங்கள் என்று கூறினார். சீன சமூகம் அதன் தாய்மொழி மற்றும் தாய்மொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நடத்தி வரும் போராட்டம் தங்களுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது என்றாரவர்.
லியன் கியோக் மலேசிய மக்களின் ஆன்மா
தமிழ் அறவாரியமும் எல்எல்ஜி மையமும் பொதுவான இலட்சியத்தையும் இலக்கையும் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய எல்எல்ஜி மையத்தின் தலைவர் டாக்டர் தோ கின் வூன், பன்மொழிக் கல்வி, மற்றும் பல்லினக் கலாச்சாரம் ஆகியவை இந்நாட்டில் மேலும் வளர்ச்சி காண வேண்டும் என்றார்.
“லிம் லியன் கியோக் சீன சமூகத்தின் ஆன்மா மட்டுமல்ல. அவர் அனைத்து மலேசியர்களின் ஆன்மா. அவர் அனைத்து தாய்மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போராடினார். சீனர், தமிழர் மற்றும் மலாய்க்காரர் ஆகிய அனைவரின் தாய்மொழிகளுக்காவும் போராடினார்”, என்று தோ கூறினார்.
லியன் கியோக் அவரது போராட்டத்தில் உறுதியாக இருந்தார். அதன் விளைவாக அவரது குடியுரிமை பறிக்கப்பட்டதோடு ஆசியர் பணி புரிவதற்கான அவரது உரிமமும் மீட்டுக்கொள்ளப்பட்டது. அவரது நினைவாக, அவரது போராட்ட உணர்வை இளந்தலைமுறையினருக்கு ஊட்டுவதற்காக நிறுவப்பட்டது எல்எல்ஜி மையம் என்று தோ மேலும் கூறினார்.
“நீதி, ஜனநாயக உரிமை மற்றும் சமமாக நடத்தப்படுதல் ஆகியவற்றுக்கான அவரின் போராட்ட உணர்வை ஜூலை 9 இல் நாம் காண முடிந்தது”, என்றார் தோ.
தமிழ் அறவாரியமும் எல்எல்ஜி மையமும் பல பொதுவான நோக்கங்களைக் கொண்டுள்ளன. இன்றிரவு நடக்கும் இச்சந்திப்பு எதிர்காலத்தில் நல்ல விளைவுகளுக்கு வழிகோளும் என்று நம்புவதாக தோ கூறினார். “முற்போக்குள்ள சக்திகளுடன் நாம் இணைய வேண்டும்”, என்றாரவர்.
தமிழ்க் கல்வி தேசிய விவகாரம்
“இன்றிரவு நடக்கும் இச்சந்திப்பு வரலாற்றுப்பூர்வமானது” என்று தமிழ் அறைவாரியத்தின் தலைவர் சி.பசுபதி கூறினார். தமிழ் அறவாரியத்தின் முதலாவது இலட்சியம் தாய்மொழிக் கல்வியை மேம்படுத்துவதாகும் என்றாரவர்.
தாய்மொழிக் கல்வி மற்றும் தமிழ்ப்பள்ளிகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக பல்வேறு அமைப்புகள் பல்வேறு காலகட்டங்களில் தோன்றின. ஆனால், அவற்றில் பல அரசியல்வாதிகளின் கைப்பாவையாக மாற்றப்பட்டுவிட்டதால், தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டது என்று விவரித்த பசுபதி, “தமிழ்க் கல்வி ஒரு தேசிய விவகாரம் ஆகும், ஏனென்றால் இந்தியர்கள் இந்நாட்டு குடிமக்கள்” என்பதை அவர் வலியுறுத்தினார்.
“பேசுவதற்கான சரியான நேரம் இதுதான். எல்எல்ஜியுடன் இணைந்து பேசுவோம், செயல்படுவோம்”, என்றாரவர்.
எல்எல்ஜிக்கு நீதி வேண்டும்
தாய்மொழிக் கல்விக்காக போராட்டம் நடத்திய லிம் லியன் கியோக்கின் குடியுரிமையை அரசாங்கம் பறித்தது. அவ்வுரிமையை அவருக்கு மீண்டும் வழங்க வேண்டும். லிம் லியன் கியோக்கு நீதி வேண்டும் என்று கோரும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அக்கோரிக்கை பிரதமர் நஜிப்பிடம் தபால் அட்டை மூலம் சமர்ப்பிக்கப்படும். ஓர் இலட்சம் தபால் அட்டைகள் அனுப்பப்படும் என்று எல்எல்ஜி உறுப்பினர் அவரது விளக்க உரையில் கூறினார். அத்துடன், சமத்துவக் கல்வி சட்டம் இயற்றி தாய்மொழிக் கல்விக்கு உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
சந்திப்பில் பங்கேற்ற இரு தரப்பின் பிரதிநிதிகளும் பல்வேறு கருத்துகளைப் பறிமாறிக் கொண்டனர். தேசிய இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மற்றும் மெண்டரின் மொழிகள் போதனை குறித்து நீண்ட கருத்துப் பறிமாற்றம் நடந்தது. பிரச்னைகள் நிறைய இருக்கின்றன. அவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழ் அறவாறியத்தின் சார்பில் கா. ஆறுமுகம் அன்பளிப்பாக வழங்கிய லிம் லியன் கியோக் பற்றிய தமிழ்ப் புத்தகத்தின் நூறு பிரதிகளை டாக்டர் தோ பெற்றுக் கொண்டார்.
z