காலஞ்சென்ற சீனக் கல்விமான் லிம் லியான் கியோக்கின் பறிக்கப்பட்ட குடியுரிமை மீண்டும் அன்னாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று இயக்கம் தொடங்கியுள்ள சீனர் சங்கங்களுக்கு எதிராக பெர்க்காசா போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
“லிம் லியான் கியோக்குக்கு நீதி” இயக்கம் எல்எல்ஜி கலாச்சார மேம்பாட்டு மையத்தால் தொடங்கப்பட்டது. அம்மையம், கெராக்கான் முன்னாள் தலைவரும் முன்னாள் பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினருமான தோ கின் வூன் தலைமையில் செயல்படும் ஓர் அரசுசாரா அமைப்பு (என்ஜிஓ). சீனர் சங்கங்கள் பலவும் அந்த இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கின்றன.
அவ்வியக்கத்தின் ஏற்பாட்டாளர்களின் குடியுரிமையைப் பறித்து வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
“சீனர் சமூகம் அவர்களின் பள்ளிகளுக்குச் சமத்துவம் கேட்டுத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதை பெர்க்காசா கடுமையானதாகக் கருதுகிறது. அரசாங்கம் சீனத்தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இயங்க அனுமதியளித்து அவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள்”, என்று பெர்க்காசாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த ஓர் அறிக்கை கூறியது.
அரசாங்கம் பலவீனமாகவுள்ள நேரம் பார்த்து அந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவ்வறிக்கை சீனர் சமூகத்தைத் தூண்டிவிட கம்யூனிசக் கொள்கைகளைப் பயன்படுத்தும் முயற்சிகள் தென்படுவதாகவும் கூறியது.
“எனவே அவர்கள்மீது தேச நிந்தனை குற்றம் சாட்டப்பட வேண்டும்”, என்று அது கேட்டுக்கொண்டது.
லிம்(1901-1985), மலேசியாவில் சீனர்பள்ளி வளர்ச்சிக்குப் பாடுப்பட்ட தலைசிறந்த சீனக் கல்விமானாக சீனர் சமூகத்தால் போற்றப்படுகின்றவர்.அவர், ஐக்கிய சீனப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் (ஜியோ ஸோங்) தலைவராகவும் இருந்தார்.
தாய்மொழிப்பள்ளிகள் நியாயமாகவும் தேசியப் பள்ளிகளுக்குச் சமமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று போராடியவர். 1950-களில் சீன இடைநிலைப் பள்ளிகளில் சீனத்துக்குப் பதில் ஆங்கிலம் போதனா மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை லிம் கடுமையாக எதிர்த்தார்.
இதனால் அவரின் குடியுரிமையும் ஆசிரியர் தொழில் செய்வதற்கான உரிமமும் 1961-இல் பறிக்கப்பட்டன.
1985-இல் லிம் காலமானார். சீனர் சமூகம் அவரை “மலேசிய சீனர்களின் ஆன்மா”என்று போற்றிப் பாராட்டியது.
அவரது குடியுரிமை பறிக்கப்பட்டு இப்போது 50 ஆண்டுகள் ஆகின்றன. 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி பறிக்கப்பட்ட குடியுரிமையை அவருக்கு மீண்டும் பெற்றுத்தரும் முயற்சியில் சீனர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்பில் கையெழுத்து திரட்டுதல், கருத்தரங்கம், கண்காட்சி, திரைப்படம் காண்பித்தல், நாடகம் எனப் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வியக்கம் இரு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று, லிம்மின் குடியுரிமையைத் திரும்பப் பெற்றுக்கொடுப்பது இன்னொன்று, தாய்மொழிக் கல்விக்குச் சமத்துவமும் நியாயமும் கிடைப்பதற்கு வகைசெய்யும் கல்விச் சமத்துவச் சட்டம் ஒன்றை உருவாக்குவது.
பெர்க்
காசாவின் கூற்றுகளுக்கு எதிர்வினையாற்றிய எல்எல்ஜி கலாச்சார மேம்பாட்டு மையம், அது அறிவார்ந்த, சட்டப்பூர்வமான, அமைதியான, சிவில் உரிமைக்காக போராடும் ஓர் இயக்கம் என்று கூறியது.
நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது, அரசமைப்பின் பகுதி 8(1),பகுதி 8(2) ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியது. அவை, சமய, வம்சாவளி, இன, பிறப்பிடம், பால் வேறுபாடின்றி குடிமக்கள் அனைவரும் சம உரிமை பெற்றவர்கள் என்று கூறுகின்றன.
அதை வைத்துப் பார்க்கையில் தேசியப் பள்ளிகளை மட்டுமே புதிதாகக் கட்டுவதும் தாய்மொழிப் பள்ளிகளைப் புறக்கணிப்பதும் அரசமைப்புக்குப் புறம்பான பாரபட்சமாகும் என்று அந்த அறிக்கை கூறியது.
“ஏற்பாட்டாளர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்று பெர்க்காசா அறைகூவல் விடுப்பதில் அர்த்தமில்லை. அவ்வாறு கூறுவது நாட்டின் மிக உயர் சட்டமான அரசமைப்பைப் பழிப்பதாகும்.
“பூமிபுத்ராக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் பெர்க்காசா உண்மையில் அரசமைப்பு எல்லைதாண்டி பூமிபுத்ரா-அல்லாதாரின் உரிமைகளில் கைவைக்கிறது”, என்று அந்த அறிக்கை மேலும் கூறிற்று.
கம்யூனிஸ்டு சித்தாந்தத்தைப் புகுத்தவும் சீனர்களைத் தூண்டிவிடவும் முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுவதையும் அந்த என்ஜிஓ மறுத்தது.
லிம்மின் குடியுரிமை பறிக்கப்பட்டது மிகப் பெரிய அநீதி என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
“லிம்முக்கு நீதி கிடைக்கவும் தாய்மொழிக் கல்விக்குச் சமத்துவமும் தேடித்தரவும் 50, 100 அல்லது 200 ஆண்டுகள் ஆனாலும் அதற்காகப் போராடுவோம்.”
அந்த என்ஜிஓ-வின் இந்த நிலைபாட்டுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்ட 50 சீன இளைஞர் சங்கங்கள், பெர்க்காசாவை, அந்த இயக்கத்தின் நோக்கங்களைத் திரித்துக் கூறி இனங்களுக்கிடையில் பதற்ற நிலையை உண்டுபண்ண முயல்வதாகக் கண்டித்தன.